விளையாட்டு செய்திகள் _மீண்டும் வெல்லுமா பிரான்ஸ்! உலகக் கோப்பை யாருக்கு 2வது முறையாக

மீண்டும் வெல்லுமா பிரான்ஸ்! உலகக் கோப்பை யாருக்கு 2வது முறையாக

ஃபிபா உலகக் கோப்பை கிளைமாக்ஸை எட்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை போட்டியின் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக கோப்பையை வெல்ல பிரான்ஸ் துடிப்பாக உள்ளது. அதே நேரத்தில் கோப்பையை முதல் முறையாக வென்று சாதிக்க குரேஷியா வேகத்துடன்இருக்கின்றன .

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது. ஒரு மாதமாக பல்வேறு அதிர்ச்சிகள், ஆச்சரியங்களை சந்தித்த நிலையில், 21வது ஃபிபா உலகக் கோப்பை கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது.

பிரான்ஸ் கலக்கல் இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்றது.

காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என வென்றது. மூன்றாவது முறையாக பைனலில் விளையாடும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது.

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது.

நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. அரை இறுதியில் இங்கிலாந்து 2-1 என வென்று அசத்தியது. முதல் முறையாக பைனலில் விளையாடுகிறது.

பிரான்ஸ் மீது எதிர்பார்ப்பு பிரான்ஸ் மற்றும் குரேஷியா இதுவரை மூன்று முறை உலகக் கோப்பையில் சந்தித்துள்ளன. யுகோஸ்லாவியாவாக இருந்தபோது 1954, 1958ல் நடந்த ஆட்டங்களில் பிரான்ஸை வீழ்த்தியது. அதே நேரத்தில் தனி நாடானப் பிறகு, 1998ல் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என குரேஷியாவை வென்றது. புள்ளி விவரங்கள் பிரான்ஸ்க்கு சாதகமாக உள்ளன.

மாஸ்கோவில் நாளை இரவு 8.30 மணிக்கு நடக்கும் பைனலில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மிகவும் வேகத்துடன் உள்ள குரேஷியாவும் மோத உள்ளன.தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன. இந்த முறை வெல்லப் போவது யார் என்பது தெரியும்.

கோப்பை யாருக்கு இந்த உலகக் கோப்பையில் பிரான்ஸைவிட குரேஷியா வலுவாக காணப்பட்டாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரான்ஸ்க்கு அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 1998க்குப் பிறகு 2வது முறையாக கோப்பையை வெல்ல பிரான்ஸ் துடிப்புடன் உள்ளது.

இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத ஒரு அணி கோப்பையை வென்ற சாதனையை 2010ல் ஸ்பெயின் புரிந்தது. அந்த சரித்திரத்தை மீண்டும் எழுத குரேஷியா காத்திருக்கிறது. மாஸ்கோவில் நாளை இரவு 8.30 மணிக்கு துவங்கும் பைனலில், 21வது உலகக் கோப்பை சாம்பியன் யார் என்பது தெரியவரும்.

Leave a Reply

Close Menu